சுப்த வஜ்ராசனம்

செய்முறை:
வஜ்ராசன நிலையில் அமரவும் முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும். மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து – முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும்.
கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும். தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம்.இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக்கி – கத்தரிக்கோல் போன்ற நிலையில் தோளுக்குக் கீழ் – வைத்துக்கொள்ளவும்.
வலது கை இடது தோளுக்குக் கீழும், இடது கை வலது தோளுக்குக் கீழும், மடங்கிய கைகளுக்கு இடையில் தலை இருக்குமாறும் நிலைகொள்ள வேண்டும்.பழைய நிலைக்குத் திரும்ப முதலில் கைகள் இரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து, உடலின் பக்கவாட்டிற்கு கொண்டு வந்தப் பிறகு, ஆரம்பத்தில் செய்த்தைப் போல முழங்கைகளால் ஊன்றிக் கொண்டு வஜ்ராசன நிலைக்கு வரவும்.
மூச்சின் கவனம்
சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்
முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.

குணமாகும் நோய்கள்
வெகு நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக நல்லது. வாயுத்தொல்லை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.
எச்சரிக்கை
கழுத்துப் பிடிப்புள்ளவர்கள் இதயக்கோளாறு உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
ஆன்மீக பலன்கள்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் ஆற்றல்கள் செயல்படத் தொடங்குகின்றன. தொடர்ந்த பயிற்சியினால் ஓய்வு ஆழமானதாகின்றது.
பயன்பெறும் உறுப்புகள்: தொடைப்பகுதி.

பஸ்சி மோத்தாசனம்
வயிற்றுப்புறத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பைக் குறைக்கிறது.
பத்மாசனம்
மனஅழுத்தம் நீங்கும், தன்னம்பிக்கையினை வளர்க்கிறது.
பர்வத ஆசனம்
புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
யோக முத்ரா
முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும்.