பறை ஆட்டம்

பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது. அதில் எழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது.
ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது.
ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் இசைக்கருவியாகும். அதனால் போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.
- விலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவனமானது.
- காலப்போக்கில் வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறி, திருமணம், இறப்பு, தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும் இடம் பெறும் கலையாகியது.
- தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு.

குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந்திணைகளிலும் பறை முக்கிய செய்திகள் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தீட்டைப்பறை, தொண்டகச் சிறு பறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

- கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ளது. பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையர்குடியின் குறயீடாகவும், தொழிலாகவும் அமைந்தது.
- பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் ‘பறை’ பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு.
- சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்.
அமைப்பு:
தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியன. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.
இசைக்கும் முறை:
தப்பு கருவியினை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி சிம்புக்குச்சி அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் 1 செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர்.
இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், 3 செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும்.
சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர்.
தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்.
முரசம், வெருப்பறை – போர்ப் பறைகள்
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில்
(புறநானூறு. 288).
ஆறெறிப் பறை – வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை.
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும்
(சிலப்பதிகாரம். 12, 40).

பரத நாட்டியம்
பரதம் என்பது ப – பாவம் (உணர்ச்சியையும்), ர – இராகம் (இசையையும்), த- தாளம்குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகின்றது.
கும்மியாட்டம்
கும்மியாட்டம் பலர் கூடி ஆடும் ஒருவகைக் கும்மியாட்டம் அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை.
கரகாட்டம்
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும்.
காவடியாட்டம்
காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார்.