காவடியாட்டம்

Kaavadi Aattam

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது.

 

  • முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும் பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றியது தான் காவடியாட்டம்.
  • பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது.
  • தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது.
  • பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும்.
  • இது 5 கிலோ முதல் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும்.
  • சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன.
Kaavadi Aattam

கா என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப்பெருமானின்) திருவடி. “காவடியாட்டம்” என்பது காவடி+ஆட்டம் என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடிப்படியாக கொண்டு எழுந்தது எனலாம். “காவடி” என்னும் சொல் “காவுதடி” என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது. 

Kaavadi Aattam

தடியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும்

காவடி ஆட்டத்துக்கான இசை:

 

காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது.

கலைத்திற விளையாட்டு:

கைகளைப் பயன்படுத்தாமல் காவடியை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கும், தோளிலிருந்து பின்கழுத்துப் பிடரிக்கும், பிடரியிலிருந்து தலை-உச்சிக்கும் ஏற்றி ஆடும் கலைஞர் தம் திறமையை வெளிப்படுத்துவர். இந்த வகையில் காவடி ஒரு விளையாட்டு. 

காவடி வகைகள்:
  • பால் காவடி
  • பன்னீர்க் காவடி
  • மச்சக் காவடி
  • சர்ப்பக் காவடி
  • பறவைக் காவடி
  • தூக்குக் காவடி

பால் காவடி: வில் வடிவில் அமைக்கப்பட்டு தலையிலும், தோளிலுமாக சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவராலும் அதிகமாக ஆடப்படுகின்றது.

தூக்குக் காவடி: முற்கம்பினை, ஒருவரின் முதுகுத் தோலில் குத்தியெடுத்து பின் வண்டியொன்றின் மீது ஏற்றி அவரைச் சுமந்து ஊர்வலம் அழைத்துச் செல்வதாகும்.

பறவைக் காவடி: உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர்.

பிறவற்றைக் காண்க :

பறை ஆட்டம்

பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது.

பரத நாட்டியம்

பரதம் என்பது ப – பாவம் (உணர்ச்சியையும்), ர – இராகம் (இசையையும்), த- தாளம்குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகின்றது.

கும்மியாட்டம்

கும்மி ஆட்டம் பலர் கூடி ஆடும் ஒருவகைக் குத்தாட்டம் அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை.

கரகாட்டம்

கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும்.