கும்மியாட்டம்

Women Dance KummiAdi

கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கும்மியாட்டம் அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை ‘கும்மி’ ஆட்டம் ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடுவது கும்மியாட்டம்.

குரவை என்ற கலையில் இருந்து கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றி குறிப்புகள் உள்ளன.

கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

- பாரதியார்

Women Dance KummiAdi

தன்னானே நானேனன்னே தானேனன்னே  நானேனன்னே

தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே!!

கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி

சோழ பாண்டி நாடெல்லாம் செழித்துவர கும்மியடி!!

கும்மியடி கும்மியடி குலவையிட்டு கும்மியடி

விதைச்ச விதையெல்லாம் விளைஞ்சிவர கும்மியடி!!

பஞ்சமெல்லாம் தீர்க்கவந்த பாகீரதன் போல இங்கே

பரணி ஆத்துத்தண்ணி பாஞ்சுவர கும்மியடி!!

சீரான கலையத்தில சித்திரச்சம்பா நெல்லெடுத்து

வேண்டியதை கேட்டு இங்கே பொங்கலிட்டு கும்மியடி!!

மஞ்சள் முகத்தவளாம் மகமாயி கோவில்முன்னே

மங்கலமா வாழ்ந்திடவே முளைசுமந்து கும்மியடி!!

எட்டுநாளு முளைவளர்த்து அடுத்தநாளு எடுத்துவந்து

எட்டாத உயரத்த எட்டிடவே கும்மியடி!!

குலத்திலே குயவனாரின் சுள்ளையிலே தான்புகுந்து

கொசப்பாத்திரம் எடுத்துவந்து குலுங்கியாடி  கும்மியடி!!

பாங்காக வளர்ந்திருக்கும் பருத்திக்காடு தான்புகுந்து

பருத்திகுச்சி ஓடித்துவந்து பாட்டுப்பாடி கும்மியடி!!

செங்கல் சூளையிலே செஞ்சாந்து நிறமடியோ

செங்கல்பொடி வாரிவந்து செம்மாந்து கும்மியடி!!

ஆட்டுடையான் அகத்தினிலே ஆவார தொழுதிறந்து

ஆட்டுரமும் எடுத்துவந்து ஆடிப்பாடி கும்மியடி!!

மாட்டுடையான் அகத்தினிலே பூவாச தொழுதிறந்து

மாட்டுரமும் எடுத்துவந்து முளைவளர்க்க கும்மியடி!!

வெள்ளாளர் வளைதிறந்து வெள்ளைவைக்கோல் வாரிவந்து

விரித்து பரப்பிவைத்து வட்டமிட்டு கும்மியடி!!

Women Dance KummiAdi
Women Dance KummiAdi

சிறுபயறு பெரும்பயறு காரா மணிப்பயறு

சிதறாம வாங்கிவந்து சிரத்தையோட கும்மியடி!!

வாங்கிவந்த பாத்திரத்தில் பருத்திகுச்சி கீழ்பரப்பி

சம்பாவைக்கோல் மேல்பரப்பி சாஞ்சியாடி கும்மியடி!!

ஆட்டுரமும் மாட்டுரமும் அழகான தாளுரமாம்

உரத்தை கீழ்பரத்தி உற்சாகமா கும்மியடி!!

கடைதிறந்து வாங்கிவந்த பயறுவித்தை எடுத்துவந்து

உரத்தின் மேல்பரத்தி விளையவைச்சு கும்மியடி!!

என்னப்பா சூரியனே எட்டி நீயும் பார்க்காதப்பா

இருட்டில் வளரவைத்து இசைபாடி கும்மியடி!!

ஒத்தமுளை இரட்டைமுளை முத்தான மூனாம்முளை

நாத்துமுளை பார்த்து நயமாக கும்மியடி!!

மஞ்சள்முளை அடுக்குமுளை ஏழாம் ஏற்றுமுளை

எட்டாம் முளைபார்த்து ஏகாந்தமா கும்மியடி!!

ஒன்பதாம் நாளடியோ ஓங்கிவளர்ந்த முளையடியோ!

உந்துன்பம் சொல்லி சொல்லி ஓங்காரக் கும்மியடி!!

நாளெல்லாம் தான் உழைச்சி நல்லபடியா நானிருக்கேன்

எனக்கின்னு எதுவுமிங்கே வேண்டாமின்னு கும்மியடி!!

 

நல்லமனம் கொண்டோரெல்லாம் நலமாக வாழவேனும்

நயவஞ்சக பேயெல்லாம் நசுக்கியாடி கும்மியடி!!

குத்தம் செஞ்சொரேல்லாம் கூண்டிலேற்ற வேணுமின்னு

குஞ்சார முளைபார்த்து குனிந்துகுனிந்து கும்மியடி!!

Women Dance KummiAdi
பிறவற்றைக் காண்க :

கரகாட்டம்

கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டமாகும்.

காவடியாட்டம்

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார்.

பறை ஆட்டம்

பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது.

பரத நாட்டியம்

பரதம் என்பது ப – பாவம் (உணர்ச்சியையும்), ர – இராகம் (இசையையும்), த- தாளம்குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகின்றது.