பரத நாட்டியம்

Indian classical dance

இன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது. சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930-இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய சிறப்பாகத் இருந்தாலும், தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும்.

பரத நாட்டியம் என்றதுமே நம்நினைவிற்கு வருபவர் சிவபெருமானே. சிவனை நடராஜர் வடிவில்வணங்கப்பட்டே நடனம் ஆரம்பிக்கப்படுகின்றது. பரதத் தமிழ் முதற் கடவுளாக சிவனே போற்றப்படுகின்றார் என்பதிலிருந்தே இது மிகத்தொன்மை வாய்ந்தது என்பது புலனாகின்றது. மேலும் பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனாலேயே பரதம் எனும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

பரதம் என்பது ப – பாவம் (உணர்ச்சியையும்), ர – இராகம் (இசையையும்), த- தாளம்குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகின்றது. 

ஆடல் முறைகள்

  பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது.  அவை

  • நிருத்தம்
  • நிருத்தியம்
  • நாட்டியம்

அபிநயம்: அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் உள்ளன. அவை

  • ஆகார்ய அபிநயம்
  • வாசிக அபிநயம்
  • ஆங்கிக அபிநயம்
  • சாத்விக அபிநயம்
Indian classical dance

பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,  

“கைவழி நயனஞ் செல்லக்

கண்வழி மனமும் செல்ல”

மனம் வழி பாவமும்

பாவ வழி ரசமும் சேர”

எனக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிக அபிநயத்தில் அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.

அங்கம்: தலை, கைகள், மார்பு, பக்கங்கள், இடை, பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும். சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர்.

உபாங்கம்: உபாங்கம் என்பது கண், விழி, புருவம், கன்னம், மூக்கு, தாடை, பல், நாக்கு, உதடு, முகவாய் ஆகியனவாகும்.

பிரத்தியாங்கம்: புஜங்கள், முன் கைகள், முதுகு, வயிறு, தொடைகள், முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.

சாத்விக அபிநயம்: உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் மற்றும் ஒன்பான் சுவை என்றும் சொல்வார்கள். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை, கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் இது சாத்விக அபிநயமாகும். எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும், உடல் நடுங்கும், கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.

பரத நாட்டிய பாணிகள் – ஆசிரியர்கள்

பந்தநல்லூர் பாணி  வழுவூர் ராமையா பிள்ளை

வழுவூர் பாணி  திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை

தஞ்சாவூர் பாணி  தனஞ்சயன்

மைசூர் பாணி  அடையார் லக்ஷ்மணன்

காஞ்சிபுரம் பாணி  கலாநிதி நாராயணன்

நாட்டிய உருப்படிகள்

பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும். பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர். முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள் அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம் என்பவையாகும்.

சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் நடனம் ‘லாஸ்யா’ என்றும் அழைக்கப்படுகிறது.

புராணக்கதை

சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றிவிளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள் உடையலங்காரம், ஒவ்வொருவகையான ஆட்டத்திற்கும், தேவையான மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின்பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப்பட்டு விட்டது என்றும் தமிழரின் நாட்டியக் கலையான பரதநாட்டியத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை என்றும் இருகருத்து முன்வைக்கப்படுகின்றது.

பிறவற்றைக் காண்க :

கும்மியாட்டம்

கும்மி ஆட்டம் பலர் கூடி ஆடும் ஒருவகைக் குத்தாட்டம் அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை.

கரகாட்டம்

கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டமாகும்.

காவடியாட்டம்

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார்.

பறை ஆட்டம்

பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது.