திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

இனியவை கூறல்

திருவள்ளுவர் “இனியவை கூறல்” என்னும் அதிகாரத்தில் , ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் என்பது பற்றி கூறியுள்ளார்.

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

      செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள் : ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

92. அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து

      இன்சொலன் ஆகப் பெறின்

பொருள் : முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

93. முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்

      இன்சொ லினதே அறம்

பொருள் : முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

      இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

பொருள் : இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

      அணியல்ல மற்றுப் பிற

பொருள் : அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

      நாடி இனிய சொலின்

பொருள் : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

      பண்பின் தலைப்பிரியாச் சொல்

பொருள் : நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

98. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

      இம்மையும் இன்பம் தரும்

பொருள் : பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

      வன்சொல் வழங்கு வது

பொருள் : இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

100. இனிய உளவாக இன்னாத கூறல்

        கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

பொருள் : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

முப்பானூல் :

அதிகாரங்கள் :