திருக்குறள்
“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”
அன்புடைமை
அன்பின் உயர்வு மற்றும் சிறப்பு பற்றியும், அன்பினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பெருநாவலரான திருவள்ளுவர் தமது எட்டாவது “அன்புடைமை” என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார்.
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
பொருள் : உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள் : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
73. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
பொருள் : உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
74. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
பொருள் : அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
பொருள் : உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
பொருள் : அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
பொருள் : அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
பொருள் : மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு
பொருள் : அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.
80. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
பொருள் : அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
