திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

மக்கட்பேறு

திருவள்ளுவர் தமது ஏழாவது “மக்கட்பேறு” அதிகாரத்தில் நற்குணங்களும், அறிவில் சிறந்து விளங்க கூடிய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி கூறியுள்ளார்.

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

      மக்கட்பே றல்ல பிற

பொருள் : அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

      பண்புடை மக்கட் பெறின்

பொருள் : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

      தந்தம் வினையான் வரும்

பொருள் : பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

64. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

      சிறுகை அளாவிய கூழ்

பொருள் : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

      பசொற்கேட்டல் இன்பம் செவிக்கு

பொருள் : பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

66. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

      மழலைச்சொல் கேளா தவர்

பொருள் : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

67. தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

      முந்தி இருப்பச் செயல்

பொருள் : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

      மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பொருள் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

      சான்றோன் எனக்கேட்ட தாய்

பொருள் : தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

70. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

      என்நோற்றான் கொல்லெனும் சொல்

பொருள் : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

முப்பானூல் :

அதிகாரங்கள் :