திருக்குறள்
“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”
வாழ்க்கைத் துணைநலம்
இல்வாழ்கையில் பெண்ணின் அறநெறிகள் பற்றியும், குணநலன்கள் பற்றியும் தெளிவாக தமது ஆறாவது “வாழ்க்கைத் துணைநலம்” அதிகாரத்தில் கூறியுள்ளார்.
51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
பொருள் : பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
பொருள் : இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
பொருள் : நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.
54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
பொருள் : கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.
55. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
பொருள் : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
பொருள் : கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
பொருள் : தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
பொருள் : கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
பொருள் : புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
பொருள் : மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
