திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கையின் பெருமை பற்றியும், அவற்றால் ஏற்படும் நன்மைகள்பற்றியும், இல்வாழ்க்கையை சிறப்பாக நடத்துபவனை வானுலகில் வாழும் தேவர்களுக்குள் ஒருவராக மதிப்பார்கள் என்பதனை பற்றியும் மிகவும் அழகாக திருவள்ளுவர் தமது ஐந்தாவது அதிகாரமான “இல்வாழ்க்கையில்” கூறியுள்ளார்.

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

      நல்லாற்றின் நின்ற துணை

பொருள் : பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

      இல்வாழ்வான் என்பான் துணை

பொருள் : மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

      ஐம்புலத்தா றோம்பல் தலை

பொருள் : முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

      வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

பொருள் : பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து, தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

      பண்பும் பயனும் அது

பொருள் : இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

      போஒய்ப் பெறுவ தெவன்

பொருள் : அறநெறியில் இல்வாழ்கையினை ஒருவன் நடத்துவானேயானால், அப்படிப் பட்டவர்கள் அதற்குப் புறம்பான வேறு வழிகளில் சென்று பெறுவது யாது?

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

      முயல்வாருள் எல்லாம் தலை

பொருள் : இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன்.

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

      நோற்பாரின் நோன்மை உடைத்து

பொருள் : தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

49. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

      பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

பொருள் : அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

      தெய்வத்துள் வைக்கப் படும்

பொருள் : மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

முப்பானூல் :


அதிகாரங்கள் :