திருக்குறள்
“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”
அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் தமது நூலில் அறன் பற்றியும்,அதன் சிறப்புப் பற்றியும்,அறவழி மேற்கொண்டால் உயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றியும் அழகாக “அறன் வலியுறுத்தல்”என்னும் நான்காவது அதிகாரத்தில் கூறியுள்ளார்.
31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
பொருள் : அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும், ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு இல்லை.
32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
பொருள் : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
பொருள் : தம்மால் முடியக்கூடிய வழிகளால் இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அறத்தினைச் செய்தல் வேண்டும்.
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
பொருள் : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
பொருள் : பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
36. அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொருள் : பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
பொருள் : அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
பொருள் : அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
39. அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
பொருள் : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
பொருள் : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
