திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

நீத்தார் பெருமை

பொய்யில் புலவரான வள்ளுவர், தமது மூன்றாவது அதிகாரத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துபுலன்களையும் அடக்கி வாழ்பவரின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். அத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசனான இந்திரனை இவ்அதிகாரத்தில் பெருமைப்படுத்தியுள்ளார்.

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

      வேண்டும் பனுவல் துணிவு

பொருள் : தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்தவர் பெருமையை, சான்றோர் நூலில் உயர்வாக கூறுவர்.

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

      இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பொருள் : உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எப்படி அளவிட முடியாதோ ? அதுபோல ஆசைகளை துறந்த உத்தமர்களின் பெருமையை அளவிட முடியாது.

23. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்

      பெருமை பிறங்கிற் றுலகு

பொருள் : நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து மெய் உணர்ந்து,நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர் ஆவர்.

24. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

      வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

பொருள் : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

      இந்திரனே சாலுங் கரி

பொருள் : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

      செயற்கரிய செய்கலா தார்

பொருள் : செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

27. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

      வகைதெரிவான் கட்டே உலகு

பொருள் : ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

      மறைமொழி காட்டி விடும்

பொருள் : சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

29. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

      கணமேயுங் காத்தல் அரிது

பொருள் : குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

      செந்தண்மை பூண்டொழுக லான்

பொருள் : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

முப்பானூல் :


அதிகாரங்கள் :