திருக்குறள்

“இரண்டடியில் இவ்வுலகத்தை திரும்பி பார்க்க வாய்த்த வான்புகழ் வள்ளுவனின் ஓர் வரப்பிரசாதம்”

வான்சிறப்பு

பெருநாவலரான திருவள்ளுவர், தமது இரண்டாவது அதிகாரமான வான்சிறப்பில், ஐம்பூதங்களுள் (நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று) ஒன்றான நீரின் பெருமைகளையும், வளத்தையும், இவ்வுலகில் உள்ள உயிரினங்களுக்கு நீர் ஆதாரமாக இருப்பதையும் உணர்வுப்பூர்வமாக விளக்கியுள்ளார்.

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்

      தானமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் : உலகில் வாழும் உயிர்களுக்கு அமிழ்தம், உரிய காலத்தில் இடைவிடாது பெய்யும் மழையே.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

      துப்பாய தூஉ மழை

பொருள் : உண்பவர்களுக்கு உணவுப் பொருட்ககளை விளைவித்துத் தருவதோடு,தானும் உணவாக இருப்பது மழையே.

13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

      உள்நின் றுடற்றும் பசி

பொருள் : கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும்,மழைப் பொழியவிட்டால் உலகில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

      வாரி வளங்குன்றிக் கால்

பொருள் : மழை வளம் குறைந்து விட்டால், (உணவுப் பொருட்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

      எடுப்பதூஉம் எல்லாம் மழை

பொருள் : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

       பசும்புல் தலைகாண் பரிது

பொருள் : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

      தான்நல்கா தாகி விடின்

பொருள் : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

      வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

பொருள் : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

      வானம் வழங்கா தெனின்

பொருள் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

      வானின் றமையா தொழுக்கு

பொருள் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

முப்பானூல் :

அதிகாரங்கள் :