நெல்

நெல் சாகுபடி செய்யும் முறை:
நாற்றாங்கால் தயாரிப்பு:
நாற்றாங்கால் தயாரிப்புக்கு 1 சென்டுக்கு 100 கிலோ தொழு உரம், 50 கிலோ மண் புழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.
விதை தேர்வு செய்தல்:
- பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது.
- பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
நடவு செய்தல்:
- நடவு வயலில் கடைசி உழவின்போது, 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20 கிலோ விதைத்துப் பிறகு 45 நாள்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும்.
- அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு, 50 முதல் 80 கிலோ வரை தழைச் சத்தும் கிடைக்கிறது.
- பண்ணையில் காணப்படும் வேம்பு, புங்கம், கிளைசிரிடியா, செஸ்பானியா, சூபாபுல், மரத்தின் சிறுக் கிளைகளை உடைத்து வந்து சரியான ஈரப் பதத்தில் நிலத்தில் நன்கு மட்கும்படி மடக்கி உழ வேண்டும்.
- பசுந்தாள் உரப் பயிர்களை வளர்க்க முடியாவிட்டால், 1 ஏக்கருக்கு 5 டன் மண் புழு உரம் போடலாம்.
- சூடோமோனாஸ், உயிர் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து வயலில் நடுவதற்கு முன்பாக இட வேண்டும்.

- நடவு வயலில் அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட், பால்போ பாக்டீரியா 10 பாக்கெட் ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
- அசோலா உயிர் உரத்தை 1 ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் நடவு செய்த 3 முதல் 5 நாள்களுக்குள் இட்டு, நன்கு வளர்ந்த அசோலாவை (20 நாள்கள் கழித்து) கோனோவீடர் மூலம் நன்கு அழுத்தி விடுவதால், வயல்களுக்கு தழைச் சத்து உரமாகக் கிடைக்கிறது.
- களை எடுக்கும் கருவிகளான கோனோவீடர் அல்லது ரோட்டரி கருவி ஆகியவற்றைக் கொண்டு நடவு செய்த 15 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
- அவ்வாறு செய்வதால் களைகள் குறைந்து மண் காற்றோட்டம் அடைவதுடன், வேரின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. நடவு வயலில் மேல் உரமாக 1 ஏக்கருக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, பயிர் தூர் தட்டும் பருவத்தில் போட வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி:
- நெல் நடவு மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்து இரட்டிப்பு மகசூல் பெறலாம். திருந்திய நெல் சாகுபடி முறை என்பது நடைமுறையில் இருந்து வரும் நெல் சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை கொண்ட புதிய முறையாகும்.
- திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் நடவு வயலை இடை உழவுக்கு பின் நான்கு புறமும் ஏற்றதாழ்வின்றி நீர் சமமாக நிற்கும் வண்ணம் சரியான முறையில் வயலை சமப்படுத்த வேண்டும்.
- மண் பரிசோதனை அட்டவணைப்படி உரமிடுதல் வேண்டும். நாற்று விட்டு, 13 முதல் 15 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவுக்கு உபயோகிக்க வேண்டும்.

- நாற்றுகளை பிரித்து எடுத்து, 25 செ.மீ இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக 3 செ.மீ., ஆழத்திற்கு மிகாமல் மார்கர் கருவியினை பயன்படுத்தி மேலாக நடவு செய்ய வேண்டும்.
- நீர் மறைய நீர் கட்டி மண்ணின் மேல் பரப்பில் லேசான வெடிப்புகள் தோன்றிய பின் மறுபடியும் நீர் பாய்ச்ச வேண்டும்.
- இந்த முறையை பஞ்சு கட்டும் வரை கையாள வேண்டும். அதன் பின் அறுவடைக்கு முன்பு வரை மண்ணை காயவிடாமல் நீர் கட்ட வேண்டும்.
- மண்ணின் மேற்பரப்பில் லேசான வெடிப்புகள் ஏற்பட்டால் காற்றோட்டம் மேம்படுவதுடன், 30 முதல் 35 சதவீதம் நீரும் சேமிக்கப்படும்.
- திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் நடவு செய்த, 10,20, 30 மற்றும் 40வது நாளில் கோனோவீடர் கருவியை கொண்டு பயிர்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக உருளவிடவேண்டும்.
- இதனால் களைகள் கட்டுப்படுத்துவதுடன் அவை அந்த வயலுக்கே இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.
- கோனோவீடர் கருவி மண்ணை புரட்டி விடுவதால் காற்றோற்றம் கிடைக்கிறது.பழைய வேர்கள் அறுபட்டு புதிய வேர்கள் உருவாக்கப்படுகிறது.
- திருந்திய நெல் சாகுபடி மூலம் மகசூல் அதிகரிப்பது விவசாயிகள் கோனோவீடர் களை கருவியினை எத்தனை முறை பயன்படுத்துகிறார்களோ அதனை பொறுத்து அமைக்கிறது. குறைந்தது 3 முறையாவது கோனோவீடர் கருவியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
- எனவே அனைத்து விவசாயிகளும் தவறாது திருந்திய நெல் சாகுபடி முறையை கையாண்டு இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
பசுந்தாள் உரங்களின் நன்மைகள்:
- பசுந்தாள் உரம் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை 70 சதவீதம் வரை வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒரு பகுதியை நிலத்தில் சேர்க்கிறது. இதனால் நிலம் வளமடைகிறது.
- பசுந்தாள் உரம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மண்ணிற்கு அளிக்கிறது. பசுந்தாள் உரப்பயிர் நிலத்தின் அமைப்பை சீராக்குகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன் வளமான மேல் மண்ணை பாதுகாக்கிறது.
- மண்ணின் கரிமப்பொருளை அதிகப்படுத்துவதோடு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது.
- மண்ணின் கீழ் பகுதியிலுள்ள சத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டு வந்து பயிருக்கு சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. பார் நிலத்தை சீர்செய்கிறது.
- பசுந்தாள் உரப்பயிர்களை நிலத்தில் இடுவதால் விளை பொருட்களின் தரம் அதிகரிக்கிறது.
தமிழக பாரம்பரிய நெல் வகைகள்:
வாடன் சம்பா
முடுவு முழுங்கி
களர் சம்பா
குள்ள்க்கார்
நவரை
குழிவெடிச்சான்
கார்
அன்னமழகி
இலுப்பைப்பூ சம்பா
மாப்பிள்ளைச் சம்பா
கருங்குறுவை
கல்லுண்டை
கருடன் சம்பா
பனங்காட்டு குடவாழை
சீரக சம்பா
வாசனை சீரக சம்பா
விஷ்ணுபோகம்
கைவரை சம்பா
அறுபதாம் குறுவை
பூங்கார்
காட்டு யானம்
தேங்காய்ப்பூ சம்பா
கிச்சடி சம்பா
நெய் கிச்சி

எள் சாகுபடி
காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது.
மக்காசோளம்
மக்காசோளம் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை குறைக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது.
கரும்பு
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. உடலில் உள்ள சிறுநீரக குழாய் சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
நிலக்கடலை
நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.